குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர். குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்ததில் சிக்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதையறிந்த உள்ளூர் மலை கிராம மக்கள் உடனடியாக தீப்பிடித்து எரிந்த விமானத்தை அணைக்க முயற்சித்தனர். பின்னர் உள்ளூர் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக மீட்பு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் முடுக்கிவிட்டார்.
இதையடுத்து சென்னையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் விமான விபத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க 6 மருத்துவர்கள் கொண்ட குழு அங்கு சென்றனர். இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். பின்னர் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளுக்காக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உதவிய நீலகிரி ஆட்சியர், காவல்துறையினர், காட்டேரி கிராம மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுள்ளது.