தமிழகம் முழுவதும் நடந்து வரும் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்று தனது பாணியில் பேசி விளம்பரம் தேடும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அநாகரீகமானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதும் கூட, உண்மையை உலகத்திற்கு சொல்லாமல் உண்மையை மூடி மறைப்பதில் கவனம் செலுத்துகிறார்.
தமிழகம் முழுவதும் நடந்து வரும் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்று தனது பாணியில் பேசி விளம்பரம் தேடுகிறார். அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் முறையாக உறுப்பினர் சீட்டுகளை கொடுக்க வேண்டும் என்ற எடப்பாடியார் வழிகாட்டுதல்படி மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையும், தொண்டர்களுக்கு புது எழுச்சியும் உருவாகியுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக இன்றைக்கு கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை அ.தி.மு.க. உருவாக்கி வருகிறது.தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு செல்வாக்கு இல்லை தனது சொந்தக்காலில் நிற்க முடியாமல் கூட்டணி என்ற பொய்க்கால் குதிரை போல் இன்றைக்கு ஸ்டாலின் நிற்கிறார்.
பொய்க்கால் குதிரையில் உயரமாக இருப்பர், உண்மை ஆராய்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரியும்.உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க. வலிமையைப் பற்றி பேசவும், கள ஆய்வு குறித்து விமர்சனம் செய்வதற்கும், தன்னுடைய பிறந்தநாள் விழாவிலே ஒரு அநாகரிகமான பேச்சை அரங்கேற்றியுள்ளார்.
82 மாவட்டங்களிலே எல்லோரும் ஒரே மாதிரி கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது செட்டப் செய்து சூட்டிங் போல இருக்கும். அது எதார்த்த கள நிலவரமாக இருக்காது. சில மாவட்டங்களில் கருத்து மோதல் விவாதம் சூடான கருத்துகளை சுவையாக எடுத்து வைக்கப்படுகிறது.
கலவரம் நடப்பதை போல, மக்களிடத்திலே ஒரு பொய் செய்தியை கொண்டு செல்வதில் தான் உதயநிதி ஸ்டாலின் தான் அக்கறை காட்டுகிறார். .அ.தி.மு.க.வை வலிமையோடு, எழுச்சியோடு எடப்பாடியார் வழி நடத்திவெற்றி நடைபோட்டு வருகிறார். இதை பொறுக்க முடியாமல் உதயநிதி பேச்சு உள்ளது” எனக் கூறியுள்ளார்.