காஸாவில் 4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் தீரா பகையின் காரணமாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் இஸ்ரேலில் வசிக்கும் பல அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினரின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீது இடைவிடா தாக்குதல்களை நடத்தி வருகிறது .
இந்நிலையில் ஹமாஸ் தலைவர்களுடன் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் கோரிக்கைக்கு செவி சாய்த்து 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.
இதேபோல் ஹமாஸ் அமைத்த சில கோரிக்கைகளை ஏற்கும் வகையில் காஸாவில் 4 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இதையடுத்து காஸாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விரைவில் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.