ITamilTv

ஜெய்பீம் சர்ச்சை: “காலண்டர் பற்றி அறிந்தவுடன்…” – இயக்குனர் கொடுத்த விளக்கம்

Spread the love

ஜெய்பீம் படத்தில் காலண்டர் குறித்து சர்ச்சைப்பற்றி படம் வெளியிடுவதற்கு முன்பே தெரிந்திருந்தால் அதை நீக்கியிருப்போம் என அப்படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறும்பொழுது;

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன.

நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம்.

1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

நவம்பர் 1 ஆம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2 ஆம் தேதி அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும் போஸ்ட் புரடெக்‌ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தை பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட, படம் வெளிவரும் முன்பே அதை மற்றி இருப்போம்.

யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு.சூர்யா அவர்களை பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது.

தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இத்திரைப்படத்தில் திரு.சூர்யா அவர்கள், பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குநராக என் பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என த.சே ஞானவேல் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்பீம் வெளியானதிலிருந்து தொடர் சர்ச்சை நீடித்துவந்த நிலையில், இயக்குனர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதன் பிறகாவது இந்த சர்ச்சை ஓயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Spread the love
Exit mobile version