ராஜாக்கண்ணுவின் வழக்கு மட்டுமல்ல, அனைத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நிலை இதுதான் என `ஜெய்பீம்’ படம் குறித்து, மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின்(NCHRO) மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
விளிம்பு நிலை மக்களின் நிலை – காவல்துறையின் சட்டவிரோத செயல்கள்-நீதிக்கான போராட்டம் என பல உண்மைகளை எடுத்து உலகிற்கு `ஜெய்பீம்’ திரைப்படம் காட்டியிருக்கிறது.
ராஜாக்கண்ணு வழக்கை மேற்கோள் காட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை பயன்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நிலை இதுதான்.
ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடந்ததோ அதையே தான் கடையநல்லூர் மசூதுவிற்கும் நடந்தது. அவரது மனைவிக்கு நீதி கிடைப்பதற்காக மனித நீதி பாசறை-MNP நீதிமன்றத்தை நாடி வழக்கை நடத்தி மசூது காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபித்து அவரது மனைவிக்கு இழப்பீடும் வாங்கி கொடுத்தது.
இது போல் பழங்குடியினர்,இஸ்லாமியர்கள், தலித்களுக்கு எதிரான காவல்துறையினரின் வன்கொடுமைகள் நடக்கும் சமயங்களில் அதனை வெகு மக்களிடம் கொண்டு செல்ல மிகுந்த சிரமப்படிருக்கிறோம். இன்று திரையில் காட்டியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு இலகுவாக சென்று சேர்ந்திருக்கிறது. இப்படத்தினை காண்போருக்கு நீதிக்கான போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
மனித உரிமை மீறல்கள் நடக்கும் சமயங்களில் களத்திற்கு சென்று உண்மைகளை கண்டறிந்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் மனித உரிமை அமைப்புகளின் பணி பிரதானமானது.
அதை தடுக்கும் விதமாக ‘மனித உரிமை அமைப்பு’ என்கிற பெயர் பயன்படுத்தக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநரும் தமிழ்நாடு அரசும் அறிவித்திருப்பது மனித உரிமை தளங்களில் பணியாற்றும் நபர்களுக்கான அமைப்பாக செயல்படும் உரிமையை பறிக்க கூடியது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் போராட்டத்திற்கு இடையூறாகவும் இருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.