தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை செப்டம்பர் 22 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க விஜயவாடா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் நேற்று ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்ததாக, அவர் மீது குற்றம்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடு சிஐடி குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்களும் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது.
விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணிநேரமாக நடைபெற்ற இது தொடர்பான விசாரணையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சந்திராபாபு நாயுடுவை செப்டம்பர் 22 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.