ஜப்பானின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 08 வியாழக்கிழமையான இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 மற்றும் 7.1 ஆக பதிவான இந்நிலநடுக்கங்களை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு தீவு கியூஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:42 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனமான NERV வெளியிட்டுள்ள தகவலில், இந்த நிலநடுக்கம் ஹியுகா – நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மியாசாகி மாகாணத்தில் உள்ள கடலில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஜப்பானின் மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா, எஹிம் போன்ற மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் அரசு.
இதற்கிடையில் கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய தீவுகள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாகவும், அங்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.