நடிகர் சூர்யாவுக்கு மறைந்த பாமகவின் முக்கிய தலைவர் காடுவெட்டி குருவின் மருமகன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குநர் பா.இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டினர். இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சித்ரவதை செய்து கொன்றனர். இதைக் கதையின் மையக்கருவாக வைத்து ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவானது.
இந்த நிலையில், வன்னியர் சமூகத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் சூர்யாவின் படம் தியேட்டர்களில் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும், சூர்யா வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
காடுவெட்டி குருவின் மருமகன் நடிகர் சூர்யாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பது, தமிழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.