மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அதனை முன்னிட்டு சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மற்றொரு புறம், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என்றாலும், கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார்.
அதன் படி, வரும் 17ஆம் தேதி சென்னை துறைமுகம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் அவர் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். குறிப்பாக விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் தொடங்குவது கவனிக்கத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, 20ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பிரச்சாரத்துடன் அவர் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
இதில் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியும் இடம்பெறுகிறது. இதனால் இரு தரப்பினரின் பிரச்சாரம் தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

