Site icon ITamilTv

காரைக்கால் – சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகள் மடாலயம்!

Karaikal - Charkuru Sri Seeman Swamy Temple

Spread the love

ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

இலங்கையில ஊமையா பொறந்தவரு, அங்குள்ள கதிர்காமம் முருகன் கோயில்ல ,அஞ்சு வயசுல பேசிய முதல் வார்த்தையே ” முருகா ” தான்

மற்ற பிள்ளைங்க போல ஓடியாடி விளையாடல.. துணிமணி போடுல.

எப்போதும் கோயிலே கதியா கெடந்து, சதா.. முருகனை மனசுல வழிபட்டு வந்ததால, அவருக்கு தெய்வச்சக்தி உண்டாச்சு

மக்கள் துயரம் கண்டு பொறுக்க முடியாம, பார்வையாலயே அனைத்தையும் போக்கினாரு.பேரும்,
புகழும் கூடிச்சு..

ஒரு கட்டத்தில் சங்கடம் வரவே, இனி ‘இந்த நாடே வேண்டாம்னு’ முடிவெடுத்தாரு….

அதுக்குப் பிறகு நடந்தது தான் நம்ப முடியாத ஆச்சர்யம்…

ஆம்….இலங்கை கடற்கரையில் இறங்கி நின்றவர், காரைக்கால் கரையில்தான் கரையேறி இருக்காரு….

அன்று முதல் அவர் அடைக்கலம் ஆனதும், இறுதியில் ஜீவசமாதி ஆனதும் இங்கேதான்.

அவர்தான் அற்புத சித்தர் ஸ்ரீ சீமான் சுவாமிகள்.

வாங்க…. காரைக்கால் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகள் மடாலயத்துக்குப் போவோம்.

முதல்ல … சித்தர்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்.

“முற்றிலும் பற்றற்ற, ஞானியராய் திகழ்ந்தவங்க சித்தர்கள். அவுங்க உடை பெரும்பாலும் கோவணம்தான். அதுவும் இல்லாம இருந்தவங்களும் உண்டு. தூங்குறதுக்கு எங்காவது ஒரு திண்ணை. குடிக்க கொஞ்சம் தண்ணீ. இப்படி இருந்தாலும் இறைவன் திருவருளால் அட்டமா சித்திகள் கைவரப்பெற்றவங்க. அவுங்களுக்கு தண்ணியில நடக்கிறது.. …காத்துல பறக்கிறது…. கூடுவிட்டு கூடு பாய்றது.. —-இதெல்லாம் சகஜம்.

அதனாலதான் மகாகவி பாரதி, “செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு”ன்னு சொன்னாரு.

“நட்டக்கல்லை சாமியென்று நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றிவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதுடா ! நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ?” –என்று ஆன்மிகத்தை வேறொரு கோணத்துல கண்டவங்கதான் சித்தர்கள்.

அப்படிப்பட்ட சித்தர்கள் 18 பேருன்னு சொல்லுவாங்க. ஆனா அவுங்க காலத்துக்கும் பொறவு, எத்தனையோ சித்தர்கள் பொறந்து பல அற்புதங்கள நடத்தியிருக்காங்க அத்தகைய சித்தர்களில் ஒருவர்தான் நாம இப்ப தெரிஞ்சிக்கப்போற சத்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகள்.

இந்த மடாலயத்தில் அமைதியான, தியான மண்டபத்தை அடுத்து, தன்வந்திரி, சிவவாக்கியர், அகத்தியர், பதஞ்சலையார்,போகர், திருமூலர் ஆகியோர் சிலைகள் அமைச்சிருக்காங்க.

அடியில் ஸ்ரீ கிருஷ்ணர் வீற்றிருக்க, சற்று உயரத்தில், ஸ்ரீ விநாயகர் பால தண்டாயுதசுவாமிக்கு
நடுவில், சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகளின் சமாதி இருக்கு. அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செஞ்சி, தினமும் வழிபாடு பண்றாங்க.

பின்புறத்தில வன்னி விநாயகர் சந்நதி இருக்கு. அதன் அருகில், ஸ்ரீ சீமான் சித்தருக்குப் பின்,
மடத்தை நிர்வகித்து வந்த ஸ்ரீகாந்த்த அரங்கராஜ குமரானந்தா சுவாமிகள், ஸ்ரீ கோவிந்தசாமி சுவாமிகள்,
ஸ்ரீ சுப்பிரமணியசாமி சுவாமிகள்,ஸ்ரீ ராமசாமி சுவாமிகள் ஆகியோரின் சமாதிகள் இருக்குங்க.மடாலய வளாகம் முழுக்க ரொம்ப சுத்தமா வச்சிருக்காங்க.பார்க்கவே ரம்மியமா இருக்கு.

சரி… இப்போ சற்குரு ஸ்ரீ சீமான் சித்தரின் விஷயத்திற்கு வருவோம்.

“சித்தர்களின் அவதாரம் என்பது வெறும் ஆன்மிக தரிசனத்தை நோக்கியது மட்டுமல்ல. ஆன்மிகத்தின் வழியாக, மக்களுக்குச் செய்யும் தொண்டையே அவர்கள் முன்னிறுத்தி வாழ்ந்தனர்.

அதனால்தான்… “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார். வள்ளலார்.

அதுபோல …”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”என்றார் தாயுமானவர்.

அத்தகைய வழிவந்த சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகளும், முற்றிலும் பற்றற்ற பழுத்த ஞானியாக, உடல் என்ற ஒன்று இருப்பதையே மறந்து, நிர்வாணக் கோலத்தில் காரைக்கால் மக்களுக்கு அளப்பரிய அருள் மழை பொழிந்து வந்தார். தன்னை நாடி வந்த அனைவரின் குறைகளையும் களைந்தார்.

காரை நகர வீதிகளில் அமைதியாக நடந்து செல்வார் .திடீரென ஏதேனும் ஒரு கடைக்குள் புகுந்து, கல்லாப்பெட்டியில் இருக்கும் காசை அள்ளி தற்போது திருநள்ளாறு ரோட்டில் உள்ள கிணற்றில் போட்டு விடுவாராம். அவர் எந்தக் கடையில் இருந்து காசை எடுத்து கிணற்றில் போட்டாரோ, அந்தக் கடை உரிமையாளர் வீடு, இறையருள் பெற்று, சகல செல்வங்களும் நிறைந்து வாழ்வில் திளைக்குமாம்.இப்படி எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்துள்ளார். இதற்கு சாட்சியாய் சுவாமிகள் காசை அள்ளிப்போட்ட கிணறு, இன்றும் ” சீமான் கிணறு” என்றே அழைக்கப்படுகிறது.

அதேபோல் வறுமையில் உழலும் ஏழைகளின் வீட்டின் சமையலறைக்கே சென்று, உணவினை அள்ளி உண்பாராம். அவர் அப்படி அமுது உண்ட இல்லங்கள் பலவும், வறுமை நீங்கி வசதிகள் பெற்றுள்ளன.

பிள்ளைப்பேறு இல்லாமையால் கலங்கிய எத்தனையோ பெண்களுக்கு, சுவாமியின் திருவாக்கின் பயனால் குழந்தைகள் பிறந்து பலனடைந்துள்ளனர்.

சுவாமிகள் காலத்தில்,காரைக்காலில் தங்கியிருந்த பிரஞ்சு அதிகாரி ஒருவருக்கு, நீண்ட காலமாக இருந்த பிரச்னை ஒன்றை தீர்த்து அருள் புரிந்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாக அந்த அதிகாரி, பிரஞ்சு மொழியில் சுவாமி பற்றி எழுதிய ஏடு, இப்போது பிரான்ஸ் தேசத்து நூலகத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் மக்களின் உடல் நோய் மற்றும் மனநோய்கள் போக்கும் சித்த மருத்துவராகவும், எதிர்காலத்தை துல்லியமாக கணித்துக் கூறும் ஜோதிட வல்லுநராகவும் சுவாமிகள் இருந்துள்ளார்.

இப்படி பலரும் போற்றும் மகானாக விளங்கிய சுவாமிகள் கி.பி .1890 -ஆம் ஆண்டு மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி எய்தினார். அந்த இடத்தில் எழுப்பப்பட்ட கோயில்தான் இப்போது சாதி, மத, இன, வேறுபாடு இல்லாமல், அனைவரும் வழிபட்டு,அவரவர் பிரச்னைக்கு உடனடி தீர்வு தரும் மடமாகத் திகழ்கிறது.

சமீபத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசித்து விட்டு, காரைக்கால் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அப்போது தம்மை யாரோ அழைப்பது போல உணர்ந்து, இந்த மடாலயத்திற்கு வந்து, நீண்ட நாளாக இருந்த தீராத பிரச்னையை தீர்க்க சுவாமிகளிடம் வேண்டியிருக்கிறார். அவர் ஊர் திரும்பிய ஒரே வாரத்தில், அப்பிரச்னை நீங்கப் பெற்று, மீண்டும் காரைக்கால் வந்து சுவாமிகளை தரிசித்து, நன்கொடையாக ஒரு பெரும் தொகையை அளித்து, நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

பூசாரி விஜயகோதண்டராமனிடம் பேசியபோது……

“இந்த மடாலயத்தில் அமர்ந்து, சித்தரை மனசார நெனச்சு, 45 நிமிஷம் தியானம் பண்ணினா போதும். மன உளைச்சல் தீரும். மனசுக்கு நிம்மதி கிட்டும்.சாமிகிட்ட வச்ச வேண்டுதல் உடனே நிறைவேறும். இது உறுதி.” என்றார்.

அப்புறம் என்ன…? உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ஒரு முறை காரைக்கால் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சற்குரு ஸ்ரீ சீமான் சுவாமிகள் மடத்திற்குச் சென்று வழிபட்டு, வளம் பெறுங்கள். வாழ்க வளமுடன் !

மீண்டும் ஒர் ஆலயத்தில் சந்திப்போம். அதுவரையில் உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ் !


Spread the love
Exit mobile version