கேரளா மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் 3 குண்டுகள் வெடித்துள்ளது . இந்த குண்டு வெடிப்பில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் . மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் 52 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
இதற்கிடையில் கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று, திருச்சூர் காவல் நிலையத்தில் டோமினிக் மார்டின் என்பவர் சரணடைந்து உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள, மாநில சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
