முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான்காம் வகுப்பு மாணவர் கடிதம் எழுதியுள்ளார்.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 18 லட்சம் மாணவ – மாணவியர் பயனடைகின்றனர்.
இந்நிலையில், ஏழை குழந்தைகள் பசியாறும் இந்த திட்டத்திற்கு கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 4ஆம் வகுப்பு மாணவர் வேண்டுகோள் வைத்து முதமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு பதிலாக கலைஞர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்து அறிவித்த பின்னர், தான் பயிலும் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சேப்ளாபட்டியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.