பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் , தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 22ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, மாநில போலீசார் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தினர்.
மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 2வது நாளாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிராண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேசனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேசனல் உமன் பிராண்ட், ஜூனியர் பிராண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் கேரளாவுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து செவ்வாய்க்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து அளிக்கப்பட்ட நிதி மற்றும் சித்தாந்த தொடர்பு மூலம், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் கிளை அமைப்புகள் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்ததாகவும், மக்கள் மனதில் பயங்கரவாதம் தொடர்பான அச்சத்தை விதைக்க பல்வேறு குற்றச் செயல்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டதாகவும், படுகொலைகளை செய்ததாகவும், நாட்டில் சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மாற்று பெயரில் செயல்பட வேண்டும்.தமிழகத்தில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மற்றும் பாஜக முயற்சி செய்கின்றன.
மதத்தையும், ஜாதியையும் தனது 2 கண்களாக வைத்து பாஜக அரசியல் செய்கிறது. 20,000 புத்தகங்களை படித்ததாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீண்டாமை இல்லை என கூறுகிறார்.ஆனால் 60 ஆயிரம் புத்தகங்களை படித்த அம்பேத்கர் தீண்டாமை இருக்கிறது என தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார. அதை அண்ணாமலை படிக்க வேண்டும். இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மேலும் சீமான், திருமாவளவனை உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மாற்று பெயரில் இயங்க வேண்டும் என சீமான் ஐடியா கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து சீமான் கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து PFI அமைப்பினர் போராட்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.