நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது.
அத்துடன் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாட, திட்டமிட்ட படக்குழு சார்பில் , நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இந்த வெற்றி விழாவை கொண்டாட பாதுகாப்பு அனுமதி கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
போலீஸ் கேட்டதற்கு இணங்க விழாவில் முக்கிய பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் உள்ளிட்ட விபரங்கள் அளிக்கப்ட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு பாதுகாப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது 200 – 300 கார்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி, பேருந்துகளில் வர அனுமதி மறுப்பு, அனுமதித்த எண்ணிக்கையின் அடிப்படையிலே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.