மதுரை – தேனி இடையிலான விரைவு ரயில் சேவை 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொடங்கப்பட்டது.
மதுரை – தேனி இடையில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை – தேனி – மதுரை செல்லும் முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் வரும் 27ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி மதுரை – தேனி இடையிலான விரைவு ரயில் சேவை 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி, தினசரி காலை 8.30 மணிக்கு மதுரையில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 8.45 மணிக்கு வடபழஞ்சி ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு உசிலம்பட்டி ரயில் நிலையத்தை 9.09 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தை 9.20 மணிக்கு வந்து சேருகிறது. இறுதியாக 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தை 6.29 மணிக்கு சென்றடைகிறது.
இதையடுத்து உசிலம்பட்டி ரயில் நிலையத்தை 6.49 மணிக்கு வந்து சேரும் இந்த ரெயில் இதன் தொடர்ச்சியாக வடபழஞ்சி ரயில் நிலையத்தை 7.10 மணிக்கும், இறுதியில் மதுரை ஜங்ஷன் ரயில் நிலையத்தை இரவு 7.35 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இருக்கின்றன.