தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் அருள்மிகு பந்தாடுநாயகி அம்பாள் உடனாகிய அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப் பாடல்பெற்ற தலமான இக்கோயிலில் நால்வர் சந்நதி அருகில், ஏரண்ட மகரிஷி (ஆத்ரேயர்) சந்நதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.
ஒரு காலத்தில் காவிரி நீர் மக்களுக்கு பயன்படாமல் திருவலஞ்சுழியில் இருந்த பெரிய பள்ளத்தில் புகுந்து பூமிக்குள் சென்று கொண்டிருந்துபோது, இறைவரின் அருளால் அதனை மீட்டெடுக்க, கொட்டையூரில் தவத்தில் இருந்த ஏரண்ட மகரிஷி, ஈசனின் அசரீரி வாக்கின்படி பள்ளத்திற்குள் இறங்கி, தன்னுயிரை தியாகம் செய்து, பின்பு காவிரியோடு தானும் மீண்டார் என புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் .
திருவலஞ்சுழி, கொட்டையூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய மூன்று தலங்களிலும் ஏரண்ட மகரிஷிக்கு சிலை (கற்சிலை திருமேனி) உள்ளது குறிப்பிடத்தக்கது. கொட்டையூரில் உற்சவ மூர்த்தியும் ( உலோகத் திருமேனி) உண்டு.
இன்று நாம் காவிரி நீரை பயன்படுத்தி வருகிறோம். அன்னை காவிரிக்கு நன்றி உணர்வோடு வழிபாடுகளை செய்வது போலவே,காவிரியை மீட்டெடுக்க தன்னையே தியாகம் செய்த ஏரண்ட மகரிஷியின் தியாகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.
அதனடிப்படையில் கொட்டையூரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று மூலவர் சுவாமி, அம்பாளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு, அருட்திரு. ஏரண்ட மகரிஷிக்கு (ஆத்ரேயர்) சிறப்பு வழிபாடுகளும் உற்சவமூர்த்தி வீதி உலாவும் நடைபெறுவது வழக்கம்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு (03.08.2024) வழக்கம்போல மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத, திருமுறை பாராயணத்துடன் புது வெள்ளமாய் பாய்ந்து வரும் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கி, புனித நீரைக் கொண்டு வந்து ஏரண்ட மகரிஷிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், உற்சவர் திருவீதி உலாவும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது :
“தவசீலர்களுக்கே உரிய தியாகத்தை வெளிப்படுத்தியவர் ஏரண்ட மகரிஷி. நன்றிப் பெருக்கோடு நடைபெறும் இந்த வழிபாடு மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.குறிப்பாக டெல்டா பகுதிகளில் “ஆடிப்பெருக்கு என்றால் கொட்டையூர்” என்று சொல்லும் வகையில் இந்த விழா விரிவடைய வேண்டும்
காவிரி நீருக்கு தென்மேற்குப் பருவமழை காரணமாக இருக்கிறது. அதே மழையின் தீவிரத்தால்,
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அத்தனை பேரின் தியாக உள்ளங்கள், இன்று கரைபுரண்டோடும் காவிரி வெள்ளத்தில் கலந்திருக்கிறது. அந்த ஆன்மாக்கள் சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் என தெரிவித்தார்.