கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்த சிறுத்தைகளை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தன்னை தாக்கிய சிறுத்தையை இளைஞர் ஒருவர் தனியாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த முத்து என்ற வேணுகோபால் கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது விவசாய நிலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று அவரைத் தாக்கி உள்ளது. வேணுகோபால் அந்த புலியை விரட்ட முயன்றும், சிறுத்தை அவரை விடாமல் தாக்கியது.
இதனால் தற்காப்புக்காக வேணுகோபால் அதை பிடித்து கயிற்றால் கால்களை கட்டி சைக்கிளில் தனது கிராமத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலில் பேரில் வந்த வனத்துறையினர், சிறுத்தை புலியை மீட்டு கந்தசியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறுத்தை வனத்தில் விடப்பட்டது
வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்றாலும், வனச்சட்டத்தின்படி, வேணுகோபால் தற்காப்புக்காக விலங்கைப் பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் முத்து சிறுத்தையை கையாண்ட விதம் தவறு என வனத்துறையினர் எச்சரித்தனர்.