முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 ராணுவ உயரதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8 ஆம் தேதி விபத்துக்கு உள்ளாகியது.
இந்த விபத்தில் இந்தியாவின் முப்படைகளுக்கும் முதல் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது.
ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த அன்றைய தினமே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே உள்ளிட்டோரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முப்படைகளின் புதிய தளபதியை தேர்வுசெய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளில் ஒருவர் முப்படைகளின் தளபதியாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

அதில் ராணுவ தளபதி நரவானே பெயர் முன்னிலையில் இருப்பதாகவும், அவரே அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை எம்.எம். நரவானே குழு தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.