மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த படத்தில் தனக்கு வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து மருத்துவமனைக்குக் கிளம்பி சென்றார். ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலமானார்.
தற்போது அவருக்கு வயது 56. இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, மாரிமுத்து அண்மையில் வெளியான ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார். மேலும், சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் மாரிமுத்து நடித்த ‘விழா நாயகன்’ என்ற படத்தின் ஷூட்டிங்கில் தான் மாரிமுத்து கடைசியாக கலந்துகொண்டாராம். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் தன்னுடைய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பாக செல்பி எடுத்தபடி நிற்கிறார் மாரிமுத்து. அதில் ‘இமயம் சரிந்தது’ எனக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
‘விழா நாயகன்’ படத்தில் வரும் ஒரு காட்சிக்காக அமைக்கப்பட்ட இந்த பேனர் முன் தான் மாரிமுத்து கடைசியாக செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.