இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன் “எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளராக துரை வைகோ பத்தி ஏற்றத்தில் இருந்து, இவருக்கும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
பொது இடங்களிலும், பத்திரிக்கை செய்தியிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்தனர். சமீபத்தில் மல்லை சத்தியாவிற்கு துரோகி பட்டம் கட்டப்பட்டது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது இருவரின் மோதலை தீவிரப்படுத்தியது. இதன் நீட்சியாக மல்லை சத்யாவை மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மோதலின் முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:
வாரிசு அரசியல் சர்ச்சை :
வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கியப் பதவிக்கு வந்ததில் இருந்து, வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களை மல்லை சத்யா தொடர்ந்து முன்வைத்து வந்தார்.
வாரிசு அரசியலுக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கிய வைகோ, இப்போது தன் மகனுக்கே முக்கியப் பதவி கொடுப்பதாக மல்லை சத்யா நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றம் சாட்டினார்.
“மறுமலர்ச்சி திமுக, மகன் திமுகவாக மாறிவிட்டது” என மல்லை சத்யா வெளிப்படையாகக் கூறியது இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
கட்சி விரோத நடவடிக்கைகள்:
கட்சியிலிருந்து விலகிய பின்பு துரை வைகோவுக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்களுடன் மல்லை சத்யா தொடர்ப்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுவும் இருவரின் விரிசலை தீவிரமாக்கியது.
துரோகிப் பட்டம்:
ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வைகோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல, தனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என்று மறைமுகமாகப் பேசினார்.
“வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளார்” என மல்லை சத்யா பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.
தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை வைகோ தனது மகனுக்காக வீழ்த்துவதாக கடிதம் எழுதிய மல்லை சத்யா, நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார்.
இதன் விளைவாக, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 17 ஆம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வைகோவுக்கு மல்லை சத்யா விளக்க கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து மல்லை சத்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மல்லை சத்யா, “என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார்.
ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்” எனக் கூறினார்.