மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கரோலின் டாலஹைடு (25 வயது, 47வது ரேங்க்) உடன் மோதிய மரியா சாக்கரி (28 வயது, 9வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாக்கரி 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டபுள்யு.டி.ஏ ஒற்றையர் பிரிவில் தனது 2வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2019 மொராக்கோ ஓபனில் அவர் தனது முதல் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.
குவாதலஜாராவில் கடந்த ஆண்டும் பைனல் வரை முன்னேறி இருந்த சாக்கரி, அப்போது அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் தோற்று 2வது இடம் பிடித்தார்.
மெக்சிகோ ஓபனில் பட்டம் வென்றதை அடுத்து, இன்று வெளியாகும் தரவரிசை பட்டியலில் சாக்கரி 9வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடிக்க உள்ளார்.