தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டதை தொடர்ந்து திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை(urimai thogai) வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில மகளிர் தொண்டரணி சார்பில் திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கழகமும் கலைஞரும் செய்த சாதனைகளை விளக்கும் கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் , அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன் ,மாநில மகளிரணி செயலாளர் திருமதி. ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் திருமதி. நாமக்கல் ராணி, இணைச் செயலாளர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.