திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதால் அமைச்சர் தங்கம் தென்னெரசு நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் .
துலுக்கர்பட்டி அகழாய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறிருப்பதாவது :
அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி..!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும் என அமைச்சர் தங்கம் தென்னெரசு தெரிவித்துள்ளார்.