கர்நாடகாவில் உணவில் விஷம் வைத்து 20 குரங்குகளை கொனறு சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் பெரிய சாக்கு மூட்டை ஒன்று மர்மமான முறையில் கிடப்பதைப்பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் குறித்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அந்த சாக்கு மூட்டையில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன.
இதனை அடுத்து மேற்கொள்ளபட்ட விசாரனையில் அந்த குரங்குகளை மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று உடல்களை சாக்கு பையில் திணித்து கொண்டு வந்து வீசிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குரங்குகளின் உடல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குரங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து கல்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குரங்குகளை கொன்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழ்துள்ளது.