தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தங்கப்ப நகரைச் சேர்ந்த கற்பகம் மற்றும் அவரது 7 வயது மகள் தர்ஷினி ஆகிய இருவரும் கடந்த 12ஆம் தேதி ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்தபோது திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தனர். இத்தனை அடுத்து சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் உணவு மற்றும் குளிர்பானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், பூச்சி மருந்து சாப்பிட்டதால் இருவரும் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தனர்.
அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரப்பெருமாள் என்பவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஏற்கெனவே இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை குடும்பத்தினரிடம் காட்டிவிடுவதாக மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.