புற்றுநோய்களிலேயே மிகவும் கொடியது வாய் புற்று நோய் (Mouth Cancer). இதன் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.
இதையும் படிங்க : கிச்சிலி கிழங்கு : முகப்பருக்கள் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும்!!
ஆனால் பெரும்பாலானோருக்கு சரியாக அறிகுறிகள் கூட தெரியாத ஒரு புற்றுநோய் என்றால் அது வாய் புற்றுநோய்.
வாய் புற்றுநோய் என்றால் என்ன?
வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உருவாகும் புற்று நோய் தான் வாய் புற்றுநோய் எனப்படுகிறது.
இந்த நோய் (Mouth Cancer) வருவதற்கான காரணங்கள் என்ன?
அதிகமாக மது அருந்துதல், புகைப்பிடிக்கும் பழக்கம் ஆகிய இரண்டும் தான் ஒருவருக்கு வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது வாய் புற்று நோயின் அபாயத்தை 4 மடங்கு அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தவிர மோசமான உணவுப் பழக்கங்கள், வெயிலில் அதிகம் சுற்றுவது மற்றும் பாதுகாப்பு இல்லாத வாய்வழி உடலுறவு மூலம் பரவக்கூடிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகியவையும் வாய் புற்றுநோய் வருவதற்கு காரணமாக உள்ளது.
வாய்புற்று நோயின் அறிகுறிகள் :
வாய், தொண்டை, நாக்கு போன்ற பகுதியில் கட்டிகள் அல்லது வீக்கம் காணப்படுவது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த சமயத்தில் வாய் அல்லது கழுத்துப் பகுதியில் வரும் கட்டிகளானது நீண்ட நாட்கள் நீடித்திருக்கும்.
இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
வாயில் எங்கேனும் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுக்கள் இருந்தால் ஒருமுறை மருத்துவரை அணுகுவது நல்லது.
உணவை உட்கொள்ளும் போது அல்லது நீர் அருந்தும்போது அதிகப்படியான வலியுடன், சிரமத்தை உணர்வது. உணவை மெல்ல கூட முடியாமல் சிரமப்படுவது ஆகியவை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் எல்லாம் தொடர்ந்து 6 வாரத்திற்கும் மேலாக நீடித்திருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகளை வைத்து சுதாரித்துக் கொண்டு வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்தால், முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.