முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 30ஆம்தேதி வரை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து 29ஆம் தேதி விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர், பின்னர் 30ஆம் தேதி சாலை மார்க்கமாக ராமநாதபுரம் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருந்தார். கடந்த ஆண்டு அவரால் செல்ல முடியாத சூழ்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் நேரடியாக சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.