கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து மீண்டும் அதிகாலை 4.30 மணிக்கு மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 50க்கும் மேல் அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
இதையும் படிங்க : வயநாடு நிலச்சரிவு : தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. மீட்புப்பணிகள் தீவிரம்!!
“கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும், இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேரள மாநில அரசையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.