திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8-9-2023 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர்.
அப்போது இதில் பயணித்த பயணிகள் நிறுத்தப்பட்ட வாகனத்தின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த திருமதி. செல்வி (60) சேட்டம்மாள், (வயது 55), திருமதி.மீரா, (வயது 51), திருமதி.தேவகி, (வயது 50), திருமதி.கலாவதி, (வயது 50), திருமதி.சாவித்ரி, (வயது 42), திருமதி.கீதாஞ்சலி, (வயது 35) மற்றும் திருமதி.தெய்வானை, (வயது 32) ஆகிய ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், உயர் மருத்துவமும் அளித்திட உடனடியாக உத்தரவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.