நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும் தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர் என்று நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நமது புரட்சித் தொண்டன் நாளிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின், பண்ருட்டி ராமச்சந்திரன் , நாளிதழை வெளியிட, கட்சிக்காக உழைக்கும் அதிமுகவின் தொண்டர்கள் நாளிதழைப் பெற்றுக்கொண்டனர்.
‘நமது புரட்சித் தொண்டன்’ நாளேட்டின் ஆசிரியராக, நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு உரைகள் எழுதித் தந்தவரும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம்,நமது இயக்கத்தில் துரோகிகளுக்கு இடமில்லை, மக்களும் தொண்டர்களும் நம்மோடு தான் உள்ளனர். நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும் என கழக தொண்டர்களின் கோரிக்கையால் தான் நமது புரட்சி தொண்டன் என்கிற நாளிதழை தொடங்கியுள்ளோம். இரண்டாம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக அதன் பரிமாணத்தை அடைந்து மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றி வருகிறோம். நாளிதழ் பரிமாண வளர்ச்சி அடைய மருது அழகுராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
எந்த காலத்திலும் அரசியல் நாகரீகத்தில் இருந்து குறைந்துவிடாமல் எதிர் கட்சிகளும் பாராட்டும் விதமாக கருத்துக்களை முன்வைத்த அண்ணா வழியில் நமது புரட்சி தொண்டன் நாளிதழ் செயல்படும்.
தொண்டர்களிடம் இருந்து ஆண்டு சந்தா பெற்றுள்ளோம், எனவே நீங்களும் நாளிதழில் பங்காளிகள் தான், அதன் படி என்றும் இந்த நாளிதழ் செயல்படும்.புரட்சி தலைவர் வகுத்த சட்டம் தொண்டனுக்கு கொடுத்த உச்ச பட்ச மரியாதை தொணடனும் தலைமைக்கு போட்டியிடும் வாய்ப்பு, அதற்கு சிறு மாசு ஏற்படுவதற்கு யாராவது முயற்சித்தால் அதை முளையிலே கிள்ளி எறியும் சக்தியாக தான புரட்சி தொண்டன் நாளிதழ் இருக்கும்.
ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதனை உச்சநிலையில் நிறுத்துவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்பது நன்கறிவேன். நீங்களும் உறுதுணையாக நின்று பணியாற்ற வேண்டும்.தமிழக மக்களின் நலன் காக்கும் பத்திரிக்கையாக நமது புரட்சி தொண்டன் பத்திரிக்கை இயங்கும் என தெரிவித்தார்.