மாநில அரசுகள் மத்திய அரசோடு மல்லுக்கட்டாமல் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றினால் மட்டுமே நாள்தோறும் நடைபெற்று வரும் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க முடியும் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உர மானியம், விவசாயிகள் கௌரவ நிதி, நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை மாநில அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு செயல்படுத்தும் போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதையடுத்து, போலி பயனாளிகளை அடையாளம் காணும் பெரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதோடு, இந்த திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசுகளையும் முடுக்கி விட்டுள்ளது.
விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இது வரை 1 கோடியே, 71 லட்சம் போலி மற்றும் தகுதியில்லாத பயனாளிகள் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் தவறான, தகுதியற்ற நபர்களுக்கு செல்லவிருந்த ரூபாய் 9000 கோடி தடுக்கப்பட்டு, சரியான தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும்.
மத்திய அரசால் வழங்கப்படும் மானியமாக வழங்கப்படும் உரம் விவசாய தேவைகளுக்கு இல்லாமல், தவறாக தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுவதை மத்திய அரசின் சோதனைக்குழுக்கள் கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 5000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதே போல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் போலி பயனாளிகள் மற்றும் தகுதி பெறாத பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் போலி பயனாளிகளுக்கு செல்லவிருந்த ரூபாய் 4000 கோடி சேமிக்கப்பட்டு, உரிய, தேவையான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
ஆக மொத்தம் இந்த மூன்று திட்டங்களில் மட்டும் ரூபாய் 18,000 கோடி மக்கள் பணம் போலி பயனாளிகள் வசம் செல்லாமல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே இது போன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.