3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குஜராத் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைய உள்ளது.
நாடு முழுவதும் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் 3ம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ”ராகுல் காந்தியை கிண்டல் செய்த ரஷ்ய செஸ் வீரர்..” கடுப்பான காங்கிரஸ்!
இதில், 26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதே போல் கோவாவின் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் மத்திய பிரதேசத்தின் பெத்துல் நாடாளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ,பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென உயிரிழந்தார்.
இதனால் அங்கு நடக்க இருந்த தேர்தல் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதனால் பெத்துல் தொகுதியையும் சேர்த்து 95 தொகுதிகளில் வரும் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இதே போன்று, தாத்தார நகர் ஹவேலி, டாமன் டையூ உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பரப்புரை செய்து வரும் நிலையில்,
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.