ITamilTv

மோடி அரசின் பல்லை பிடித்து பார்க்கும் OTT நிறுவனங்கள்! கைகோர்த்த JioCinema?

Spread the love

மத்திய அரசின் புதிய விதிமுறைகளை சட்ட ரீதியாக எதிர்க்க திட்டம் போடும் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar), அமேசான் பிரைம் (Amazon Prime) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) ஜியோ சினிமா (JioCinema) நிறுவனமும் கைக்கோர்த்துள்ளது.

ரகசிய கூட்டம்:

இதுதொடர்பாக ரகசியமாக ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ. நாட்டில் அதிகரித்துவரும் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வரிசையில், இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்தியாவில ஸ்ட்ரீமிங் செய்யும் அனைத்து ஓடிடி தளங்களுக்கும் (OTT Platforms) புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரங்கள்:

அதாவது, “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்; உயிரைக் கொல்லும் (Tobacco Causes Cancer; Tobacco Kills)” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டிஸ்கிளைமர்களை (Disclaimer) இதுவரையில் நாம் தியேட்டர்களில் வெளியாகும் படங்களிலும், டிவியில் ஒளிபரப்பாகும் படங்களிலும் மட்டுமே பார்த்திருப்போம். அதோடு, புகையிலையால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடியோக்களும் டெலிகாஸ்ட் செய்யப்படும்.

இதே நடைமுறையை ஓடிடி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவாகும். இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல முடிவாகும். ஆனால், ஓடிடி நிறுவனங்களை பொறுத்தவரையில், இது மிகப்பெரும் செலவை கொடுக்கும் உத்தரவாகும்.

ஏனென்றால், இதுவரையில் ஓடிடியில் அப்லோட் செய்யப்பட்ட லட்சக்கணக்கான வீடியோக்களில் புகையிலை எதிர்ப்பு வாசகங்களை சேர்க்க வேண்டும். இது மிகப்பெரும் பணியாகும். ஒவ்வொரு வீடியோவையும் எடிட் செய்து மீண்டும் அப்லோட் செய்ய வேண்டியிருக்கும்.

அதேபோல, இந்த புதிய உத்தரவின்படி, ஓடிடியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் (Films), டிவி சீரியல்கள் (Television Serials), சீரிஸ்கள் (series) உள்ளிட்ட அனைத்து வகை புரோகிராம்களின் தொடக்கத்திலும், இடைவேளையிலும் புகையிலை விழிப்புணர்வு வாசகங்கள் 30 நொடிகளுக்கு ஆடியோ உடன் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.

அதேபோல 20 நொடிகளுக்கு புகையிலை விழிப்புணர்வு கொண்ட ஆடியோ, வீடியோ கிளிப்களை ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். இதனால் கிட்டத்தட்ட 1 நிமிடம் 30 நொடிகளுக்கான ஸ்ட்ரீமிங் ஓடிடி நிறுவனங்களுக்கு செலவாகிறது. இது படங்களின் நேரத்தையும் கூட்டும் என்றும் இணைப்பதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கிறது என்றும் ஓடிடி நிறுவனங்கள் நினைக்கின்றன.

இந்த உத்தரவை 3 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், மிகப்பெரும் ஓடிடி நிறுவனங்களான நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மூன்றும் சட்ட ரீதியாக, இந்த உத்தரவை எதிர்க்க திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக 3 நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள், சட்ட ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுடன் இப்போது, ஜியோசினிமாவும் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதிகாரம் இல்லையா…?

இதுபோன்ற உத்தரவுகளை வழங்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், இப்போது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்கியிருப்பதால் சட்டசிக்கல் உள்ளதாக ஓடிடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, கால அவகாசம் கேட்கவும் ஓடிடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மோடி அரசுக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனங்களுடன் அம்பானி கைகோர்த்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்


Spread the love
Exit mobile version