கர்ப்பிணி பெண் வீட்டில் இருந்தபடியே தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால், பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உப்புக்கார வீதியை சேர்ந்த விஜயகுமார், நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். புண்ணியவதி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், 4-ஆவது முறையாக புண்ணியவதி கர்ப்பமாகியுள்ளார். பிரசவ வலி ஏற்படவே, மருத்துவமனைக்கு செல்லாமல், தனக்கு தானே, வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தொப்புள் கொடியை சரியாக அறுக்காததாலும், பிரசவம் சரியான முறையில் இல்லாததாலும் தாயும், பிறந்த ஆண் குழந்தையும் மயங்கியுள்ளனர். இதையடுத்து தாய், சேய் இருவரும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை, சலுகைகளை வழங்கி வரும் சூழ்நிலையில், இதுபோன்று தனக்கு தானே பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.