வங்கக்கடலில் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து இதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகும் என்றும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையில் இருந்து 850 கி.மீ தூரத்தில் நீடிக்கிறது என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், இது வடமேற்கில் நகர்ந்து நாளை சென்னை கடலூர் அருகே கரையை நெருங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.