சென்னை அடையாறில் பாதசாரிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை வரும் 4ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
வரும் 4ம் தேதி டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு முதலமைச்சர் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார், இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் இதேபோன்ற சுகாதார நடைபாதைகளை முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் “நவ.4 ஆம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் கொண்ட ‘ஹெல்த் வாக் சாலை’ தொடங்கப்படவுள்ளது. பெசன்ட் நகரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன்ட் நகர் அவன்யூ பகுதி சாலைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது” என்று கூறினார்.