பார்ட் டைம் வேலையாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரை, சென்னை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் காவல்நிலைய தலைமைக் காவலர் கருப்பசாமி, துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இன்று (மே 16) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று, கருப்பசாமியைப் பார்த்ததும் தள்ளிப்போய் நின்றது.
இதனால் சந்தேகம் அடைந்த தலைமைக் காவலர், ஆட்டோவில் இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்னும் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக, தரமணியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்வதாக கூறி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து தலைமைக் காவலரின் கேள்விகளுக்கு குழப்பமாகவே பதில் அளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அவரது பெட்டியைப் பிரித்து பார்த்தபோது, அதில் 6 கிலோ அளவுக்கு உயர்ரக கஞ்சா இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ1.கோடி இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், ஐ.டி. ஊழியர் ராகுல், பார்ட் டைமாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது. பெங்களூருவுக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து கஞ்சாவை குறிப்பிட்ட நபரிடம் இருந்து வாங்கி வந்துள்ளார். சென்னையில் அவருக்கு வாட்ச் அப் காலில் பேசும் நபர் கூறுபவரிடம் கஞ்சாவை கொடுத்து வந்ததாக விசாரணையில் ராகுல் கூறியுள்ளார். இதனையடுத்து ராகுலை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவருடன் வாட்ஸ் அப்பில் பேசும் நபர் குறித்து செல்போன் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் கஞ்சா போதையால் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது, கஞ்சா பிடிபடுவதன் வழியாக அம்பலமாகி உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென கழன்று ஓடிய சக்கரம்- அன்புமணி கொடுத்த ரியாக்ஷன்!