ஆந்திர மாநில தேர்தலில், மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில அரசின் அமைச்சருமான நடிகை ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மக்களவை தேர்தலோடு, ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில்தான் அவர் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாலைகள் அணிவிக்கப்பட்டு ரோஜாவுக்கு மரியாதை செய்யப்பட்டது.

சாமி தரிசனம் முடித்து வந்த நடிகை ரோஜாவை செய்தியாளர்கள் சந்தித்து கேள்விகளை முன் வைத்தனர். அபோது பேசிய அவர், தான் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாமி தரிசனம் செய்ய வருவதாகக் கூறினார். அதன்படி, கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, அண்ணாமலையார் அருளால் அனைவரும் நலமுடன் இருக்கப் பிரார்த்தித்தாகக் கூறியவர், வருகின்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2வது முறையாக அவர் முதலமைச்சர் ஆவார் என்றும், மூன்றாவது முறையாக தான் எம்.எல்.ஏவாக இறைவன் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும்கூறினார்.