மகாராஷ்டிராவில் கணவனின் கொடுமையால் இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்ரா மாநிலம், நாசிக்கில் கோனார்க் நகரில் உள்ள Hari Vandan அபார்ட்மெண்டின் மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான தகவலில் சம்பவ இடம் வந்த நாசிக் போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது அந்தப் பெண் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் அஷ்வினி நிகும்ப் என்பது தெரியவந்தது.
அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அவரது குழந்தைகள் ஆராத்யா(8), அகஸ்தியா(2) ஆகியோர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு கிடந்தனர். அவரது கணவர் ஸ்வப்னில் வேலை தொடர்பாக புனேவுக்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சோதனையிட்டபோது, அஷ்வினி நிகும்ப் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தனது கணவர் ஸ்வனில் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக எழுதியிருந்துள்ளார். மேலும், அஷ்வினியின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் தற்கொலைக்கு முன்பாக தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோ சிக்கியது.
அந்த வீடியோவில், கணவர் ஸ்வனில், தன்னை குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியதாக அவர் பேசியிருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புனேவுக்கு சென்ற கணவர் ஸ்வப்னிலிடம் போனில் பேசிய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனின் கொடுமையால் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.