கடந்த 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா போதையில் நிகழ்ந்த கொடூரச் சம்பவங்கள் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்க, திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கேள்விகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
தாக்குதல் 1:
சென்னை கண்ணகி நகரில், கஞ்சா போதையில் போலீசாரை கல்வீசி தாக்கிய நபர்களில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு, 64வது பிளாக்கில் வசித்து வருபவர் உமாபதி. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் அவர் இளைஞர்கள் இருவரை கத்தியால் வெட்டியதாக, கண்ணகி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்காக உமாபதியை காவல்நிலையம் அழைத்துச் செல்ல, சுனாமி குடியிருப்பு பகுதிக்கு 2 காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த உமாபதியும் அவரது நண்பர்களும் போலீசாரை தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்களின் மீது கற்களையும் எடுத்து வீசிவிட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில்வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 காவலர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது புகாரின் பேரில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட உமாபதியின் நண்பர்களான பிரேம், ராகுல் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். உமாபதியை தேடி வருகின்றனர்.
போலீசாரையே கஞ்சா வியாபாரிகள் தாக்கிச் சென்ற இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னர், கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய வீடியோ வெளியாகி இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதல் 2:
தஞ்சாவூர் மாவட்டம் பழைய பாலக்கரை பகுதி பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் நடத்துநர் செந்தில்குமாரும் பேருந்தில் இருந்துள்ளார்.
பாலக்கரை அருகே பேருந்து வந்தபோது, சாலையின் நடுவே இளைஞர்கள் சிலர் பைக்கில் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களை ஓரமாக நிற்கச் சொல்லியும் கேட்காததால், ரமேஷ் பேருந்தை ஒதுக்குச் செல்ல முயன்றபோது அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஒருகட்டத்தில் அவரை பேருந்தில் இருந்து கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அதனைத் தடுத்த ஓட்டுநர் மற்றும் மேலும் இருவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த தனியார் நிறுவன செய்தியாளர்கள் இருவரையும் அந்த இளைஞர்கள் தகாத வார்த்தைகளைப் பேசிமிரட்டியுள்ளனர்.
அரசுப் பேருந்தை ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வின்போது இளைஞர்கள் கஞ்சாபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான ஒட்டுநர் ரமேஷ், நடத்துனர் உள்பட 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டு தப்ப முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். சுதர்சன், ஜனார்த்தனன் ஆகிய அந்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதை இளைஞர்களால் நிகழ்ந்துள்ள இந்த 2 சம்பவங்களும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில்,
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. எனவே, சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறிய திராவிட மாடல் அரசை வன்மையாக கண்டிப்பதோடு. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கருப்பு முருகானந்தமும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிய ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று வீராவேசமாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு இது செல்லவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆபரேசன் கஞ்சா வேட்டை என்று பல்வேறு ஆபரேஷன்களை தமிழக அரசு முன்னெடுத்தும் இன்றுவரை கஞ்சாவை கட்டுப்படுத்த முடியாதது தமிழக இளைஞர்களை சீரழித்தே வருவதாகவும் அவர்கள் ஆவேசம் காட்டுகிறார்கள்.
தமிழகம் போதையின் பிடியில் இருந்து விடுபடுமா? ஆட்சியாளர்கள் அதற்காக கூடுதல் அக்கறையை காட்டுவார்களா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாகவும் உள்ளது.