ஊழல் குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் சமீபகாலமாக தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து வந்தார்.இந்த நிலையில் அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்துக்குப் பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன்பின்னரும் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஆகியோர் உள்பட திமுக அதிகார மையங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
இந்த நிலையில்,கடந்த சில நாட்களாக சவுக்கு யூடியூப் சேனல் ஆளும்கட்சியினரால் குறிவைக்கப்படுவதாக சங்கர் குற்றம் சாட்டி வந்தார்.அங்கு பணி செய்த கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னையும், சவுக்குமீடியாவில் பணியாற்றும் பலரையும் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தது.
மேலும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஊழல் குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை செனாய் நகரில் செய்தியளர்களை சந்தித்த ஜெயக்குமார், ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருளும் தலை விரித்தாடுவதாக தெரிவித்தார். காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து பெறாததற்கு திமுக அரசு தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் கைது குறித்த கேள்விக்கு,” சவுக்கு சங்கரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது எனவும், ஊழல், குற்றச்சாட்டுகளை பொது வெளியில் பேசியதற்காக சவுக்கு சங்கரை திமுக அரசு கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.