சவத்துக்கு மரியாதை செய்வது போல குடிநீர் தொட்டிக்கு முன்பாக நாற்காலியில் குடத்தை வைத்து மாலை போட்டு குடிநீர் தொட்டிக்கு இறுதி மரியாதை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் இருக்கும் இடம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி தாலுகா சிக்கல் ஊராட்சி பகுதியாகும். இந்தப் பகுதிகளில் கடந்த மூன்றாண்டுகளாக குடிநீரின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தைக் கண்டித்து, வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் பொதுமக்களும், விவசாயிகளும்தான் இந்த நூதன போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
குடிநீர் தொட்டிக்கு இறந்த உடலுக்கு செய்யும் மரியாதை போல, மாலை சூடி, மரியாதை செய்து காலி குடங்களுடன் சுற்றி அமர்ந்தபடி, தலையில் துண்டை போட்டபடி ஒப்பாரி வைத்திருக்கிறார்கள்.
இந்த வீடியோதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், வைகை அணை தண்ணீர் செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில், தண்ணீர் கிடைக்காததால் மக்கள் நூதனப் போராட்டம் செய்யும் நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: உலக முருக பக்தர்கள் மாநாடு..- அமைச்சர் சேகர்பாபு சொன்ன முக்கிய தகவல்!