‘செங்கோல்’ குறித்த கருத்து, தமிழ் கலாசாரத்துக்கு எதிரான INDIA கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் மடத்தின் குருமார்களால் ‘செங்கோல்’ வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது வேத மந்திரங்கள் முழங்க ஆதீனங்கள், குருமார்கள் முன்னிலையில் செங்கோல் பிரதமரிடம் வழங்கப்பட்டு பிறகு நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.
இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சமாஜ்வாதி கட்சியின்எம்.பி ஆர்.கே.சவுத்ரி செங்கோலை அகற்ற வேண்டும் என்றும் மன்னர்தான் கையில் செங்கோலுடன் நீதி பரிபாலனம் செய்வார் என்றும், நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பது ஏற்புடையதல்ல என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் – போர் கொடி தூக்கிய சமாஜ்வாதி!
மேலும் , இது குறித்து மக்களவை சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும்.
நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல்.
எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ‘செங்கோல்’ குறித்த கருத்து, தமிழ் கலாசாரத்துக்கு எதிரான INDIA கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உத்திரபிரதேச முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,”இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.
‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் பதிவிட்டுள்ளார்.