முட்டையிடும் கோழிகளுக்கு மத்தியில் கீறிகளுக்கு எதிராக சண்டையிடும் சேவலாக இருந்தவர் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், அவருடன் பயணித்தவர்களும் நேற்று மாலை ஈரான் – அஜர்பைஜான் எல்லையருகில் நடந்த
உலங்கு ஊர்தி விபத்தில் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.
ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதி, சிறந்த அறிஞர், அரசியல் வல்லுநர் என்பது போன்ற பல சிறப்புகளுடன்
ஈரானின் எட்டாவது அதிபராக கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றப் போது ஆசியாவே மகிழ்ந்தது.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு..!!
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஈரானின் மீது ஒரு தலைபட்சமாக பொருளாதார தடை விதித்து ;
அந்நாட்டு மக்களை பெரும் வாழ்வியல் நெருக்கடியில் ஆழ்த்திய போதும் ;
நிலைகுலையாத நம்பிக்கையோடு அவர்களை இப்ராகிம் ரைசி உற்சாகமாக வழிநடத்தினார்.
மத்திய கிழக்கின் அரசியல் சமநிலையில் ஈரானின் பங்களிப்பை வலிமையாக உறுதி செய்தார்.
கடந்தாண்டு பாலஸ்தீனத்தின் – காஸாவின் மீது இஸ்ரேல் தொடங்கிய பயங்கரவாத போருக்கு எதிராக அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.
அதுவே உலகின் கவனத்தை ஈரானை சுற்றியே வட்டமிட வைத்தது.
நான் முட்டையிடும் கோழி அல்ல ; கீறிகளுக்கு எதிராக சண்டையிடும் சேவல் என்பதை நிருபித்து,
ஈரானின் ராணுவ மேலாண்மையை நிலைநிறுத்திய அவரது துணிச்சல் வெற்றிகரமாக நோக்கப்பட்டது.
நட்பு நாடுகளிடம் அமைதிப் புறாவாகவும்; பகை வல்லரசுகளிடம் வல்லூறாகவும் செயல்படும் ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கு அவர் மெருகேற்றினார்.
இந்தியாவுடன் பாரம்பர்ய உறவை மேம்படுத்தி ; எந்த நிலையிலும் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் ;
அரசியல் – பொருளாதார உறவுகளை வளர்த்தெடுத்தார்.
போரின் இடிபாடுகளில் தளராமல் களமாடும் பாலஸ்தீனர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.
உலகின் தலைச்சிறந்த – கவனம் குவித்த முதல் 10 தலைவர்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
காஸா மீதான இஸ்ரேலிய பயங்கரவாத போருக்கு பின்னால் உலக அரசியல் மாறி வரும் நிலையில்;
ஈரானின் சர்வதேச தேவை அதிகரித்துள்ள சூழலில்; அவரது துயர மரணம் நிகழ்ந்துள்ளது பேரதிர்ச்சியை தருகிறது.
ஒரே உலங்கு ஊர்தியில் அதிபரும், வெளியுறவு துறை அமைச்சரும் பயணித்த நிலையில், இது விபத்தா? சதியா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.
இனிவரும் விசாரணை நாட்கள் அவற்றை தெளிவுப்படுத்தக்கூடும்.

இதையும் படிங்க: ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு – பின்னணியில் இஸ்ரேலின் சதியா?
குறுகிய காலத்தில் உலகின் கவனத்தை வென்ற நிலையில், அவரது மரணம் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்களின் மீது அவர் காட்டிய நேசத்தை மறக்கவியலாது.
ஆசிய – ஆப்பிரிக்க- லத்தீன் அமெரிக்க நாடுகளின் பார் போற்றும் நண்பராக திகழ்ந்த அவரது மரணத்திற்கு
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த இரங்கலை ஈரானியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்!
அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் ஈரானியர்கள் துணிச்சலுடன் எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது என்பதை நினைவூட்டுகிறோம்.
இவ்வாறு தமிமுன் அன்சாரி இரங்கலில் கூறியுள்ளார்.