கொல்லி மலை சாமியார்கள் எனக்கூறி புதையல் எடுத்து தருவதாக ஆசைகாட்டி 7 லட்சம் ரூபாயை ஆட்டையைப் போட்ட இருவரை ஏமாந்த பெண்ணே மடக்கிப் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் விமலா.
தனது சகோதரர்களுடன் இணைந்து செங்கல் சூளை நடத்தி வரும் விமலா தொழில் நஷ்டத்தால் தவித்து வந்துள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் ஏதாவது பரிகார பூஜை செய்தால் சரியாகும் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி பூஜை செய்வதற்காக கொல்லிமலை சாமியார்களை விமலா தேடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது விமலாவை அணுகிய சுரேஷ்குமார் மற்றும் சரவணன் என்னும் இருவரும் தங்களை கொல்லிமலை சாமியார் எனக் கூறியுள்ளனர்.
அதோடு மாந்திரீகம் செய்வதில் கில்லாடி என்று கூறியவர்கள், விமலாவை நம்ப வைக்க சில சித்துவேலைகளையும் காட்டியுள்ளனர்.
இதன்பின்னர் சோலிகளை குலுக்கிப் போட்டவர்கள், செங்கல் சூளையில் புதையல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து புதையலை எடுப்பதற்காக சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் விமலாவிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில்நஷ்டம் தீரவேண்டும் என்னும் நம்பிக்கையில் சாமியார்கள் சொல்வதற்கு எல்லாம் விமலாவும் தலையாட்டியுள்ளார்.
இதன்பின்னர் விமலாவை கொல்லிமலைக்கு வரவழைத்த சுரேஷ்குமாரும், சரவணனும் சில பூஜைகளையும் செய்துள்ளனர்.
இதனையடுத்து, பூஜைகள் செய்வதற்கான பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி விமலாவிடம் பணம் கறந்துள்ளனர்.
சுமார் ஏழரை லட்சம் ரூபாய் அளவுக்கு பணத்தை பெற்றவர்கள், ஒருநாள் விமலாவின் வீட்டில் சிறிய பூஜையை நடத்தி உள்ளனர்.
அபோது மண்பானை மற்றும் சாமிசிலைகளைக் கொண்டு பூஜை செய்துவிட்டு அந்த மண்பானையை வாயைக் கட்டி கொடுத்துள்ளனர்.
48 அமாவாசைக்குப் பின்னர் அந்த மண்பானையை பார்க்கும்படியும், அப்போது அதனுள் புதையல் இருக்கும் என்றும் கூறிச் சென்றுள்ளனர்.
விமலாவும் கொல்லிமலை சாமியார்கள் கூறியதை நம்பி மண்பானையை திறந்து பார்க்காமல் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் வீட்டில் கஷ்டம் பெருகவே, மண்பானையை அவிழ்த்து பார்த்தபோது அதனுள் செங்கல் சூளையில் உள்ள களிமண் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போதுதான் வந்தவர்கள் உண்மையிலேயே கொல்லிமலை சாமியார்கள் அல்ல; டுபாக்கூர்கள் என்பது உறைத்திருக்கிறது.
தன்னை ஏமாற்றியவர்களை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
தனது உறவினர் வீட்டிலும் பரிகார பூஜை செய்யவேண்டும் என்று கூறி அவர்களின் ஆசையை தூண்டி விட்டுள்ளார்.
இதனை நம்பி புஜை பொருட்களோடு வந்த சுரேஷ்குமாரையும், சரவணனையும் மடக்கிப் பிடித்த விமலா குடும்பத்தினர் அவர்களை வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வந்தவர்கள் இருவரும் கொல்லிமலை சாமியார்கள் அல்ல என்பதும்,
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் விமலாவிடம் ஏழரை லட்சம் ரூபாய் பணத்தினை ஜீபே மூலம் பெற்று மோசடி செய்ததும் உறுதியானது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த வாழப்பாடி போலீசார், இந்த டுபாக்கூர்கள் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளார்களா என்று விசாரித்து வருகின்றனர்.