இளையராஜா – வைரமுத்து குறித்து சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில் மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவரே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“வணக்கம். நான் தினமும் கேள்விப்படுகிறேன். என்னப் பத்தி ஏதோ ஒரு வகையில தினமும் இதுமாதிரியான வீடியோக்கள் வந்துக்கிட்டு இருக்கிறதா எனக்கு வேண்டியவங்க சொல்றாங்க. நான் இதுல எல்லாம் கவனம் செலுத்துறது இல்ல. ஏன்னா, மத்தவங்கள கவனிக்கிறது என்னுடைய வேலை இல்ல. என்னுடைய வேலைய கவனிக்கிறதுதான் என்னுடைய வேலை. நான் என் வழியில, ரொம்ப க்ளினா சுத்தமா போயிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்குற நேரத்தில, கடந்த ஒரு மாதத்துல, ஒரு சிம்பொனியை எழுதி முடிச்சிட்டேன். எனக்கு சந்தோஷமான செய்தியை என்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.’’
இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மத்தவங்கள கவனிக்கிறது என் வேல இல்ல
சமீப நாட்களாக இசையா, பாடலா என்னும் விவாதம் தமிழ்சினிமாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இளையராஜா, வைரமுத்து ஆகியோரை வைத்து நடந்து வரும் இந்த சர்ச்சையில் வைரமுத்து அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு வந்தார். ஆனால் இளையராஜா நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தற்போது முதன்முறையாக வீடியோவில் இந்த சர்ச்சைகள் தொடர்பாக பேசி இருக்கிறார். மற்றவர்களை கவனிப்பது தன்னுடைய வேலை இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் யார் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதைத்தான் இளையராஜா கூறியிருக்கிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், இன்று இளையராஜாவை சந்தித்துவந்த நிலையில், இளையராஜா இந்த வீடியோ வெளியிட்டிருப்பது குறித்தும் நெட்டிசன்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.