தமிழகத்தில் குறைந்த மின் அழுத்தம் மற்றும் பரவலாக மின்வெட்டு நிலவும் நிலையில் உடனே இதை சரி செய்து மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக, வெயிலின் அளவு 110 டிகிரியையும் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதனால் பகலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இரவிலும் இதன் தாக்கம் தெரிகிறது.
வெயிலின் தாக்கத்தால் பகல், இரவு என அனைத்து நேரமும் குளிர்சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. அதோடு ஒரே நேரத்தில் பலரும் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதால், குறைந்த மின் அழுத்தம் நிலவிக் கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் மின்வெட்டும் பரவலாக இருந்து வருகிறது.
இதனை தொடக்கத்திலேயே சரி செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் தவிக்கின்றனர்.
கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் சூழலில், முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிப்பதால், மின்பற்றாக்குறை காரணமாக இன்னும் அதிகமான மின்வெட்டு இருக்க வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக நிகழும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறியை கூட இயக்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றுகொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் துவக்கத்திலேயே இதனை சரிசெய்து மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.