தேனியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் வந்த காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவுக்கு என்னும் தளத்தில் காவல்துறையினர், அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை எழுதி வந்ததால் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர் சவுக்கு சங்கர்.
காவல்துறை பணியில் இருந்து குற்றம் சாட்டப்பட்டு வெளியேறிய பின்னர் சவுக்கு சங்கர் எழுதிய ஒவ்வொரு செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
சவுக்கு என்னும் பெயரில் பல்வேறு சமூகவலைதளங்களிலும் கணக்குத் தொடங்கி அவர் பதிவு செய்த ஒவ்வொரு கருத்துக்களும், அவர் கொடுத்த இண்டர்வியூக்களூம் பல்வேறு இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தி வந்தன.
சமீபகாலமாக தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகவை சவுக்கு சங்கர் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால், சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்துக்குப் பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன்பின்னரும் விடாது கருப்பாக ஆளும் தரப்பு மீது தொடர்ந்து புகார்களை பதிவிட்டு வந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஆகியோர் உள்பட திமுக அதிகார மையங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
அதுமட்டுமின்றி சில பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி வந்தவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு.
கடந்த சில நாட்களாக சவுக்கு யூடியூப் சேனல் ஆளும்கட்சியினரால் குறிவைக்கப்படுவதாக சங்கர் குற்றம் சாட்டி வந்தார்.
அங்கு பணி செய்த கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டது இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தன்னையும், சவுக்குமீடியாவில் பணியாற்றும் பலரையும் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது.
தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், சவுக்கு சங்கர் மற்றும் காவல்துறையினர் சிலருக்கு லேசானம் காயம் ஏற்பட்டது.
காலில் ஏற்பட்ட காயத்துக்காக சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான தகவல் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், சினிமாக்களில் காட்டப்படுவது போல, இதுவும் ஒரு கொலை முயற்சியா என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் நெட்டிசன்கள்.
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.