தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று செல்வப் பெருந்தகை கூறியிருப்பது, திமுகவில் அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது.

காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தபோதும், பக்தவத்சலத்துக்குப் பின்னால் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வரவே முடியவில்லை… அரை நூற்றாண்டுகாலமாக திராவிட கட்சிகளே தமிழகத்தின் அரியணையை பங்கிட்டு வருகின்றன.
இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் மாறி மாறி சவாரி செய்தபடியே தமிழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சமீப காலங்களாக தமிழக காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கூட திமுகவுக்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவுமே செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் தொண்டர்களே குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவின் பி டீமாகவே காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
அழகிரிக்குப் பின்னால் தற்போது காங்கிரஸ் தலைவராகி இருக்கும் செல்வப்பெருந்தகையும் கூட, சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி திமுகவுக்கு ஆதரவாகவே பேசி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரதமருக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஹேஷ்யங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்த செல்வப்பெருந்தகையின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸுக்குள்ளிருந்து குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.
சமீபத்தில், சென்னையில் காமராஜர் நினைவாலயத்தை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதாக பொதுவெளியில் பொங்கியிருந்தார் செல்வப்பெருந்தகை.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவாலயத்தை ஏன் சரிவர நிர்வகிக்கவில்லை, கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை பராமரிக்கும் அளவுக்கு கூட காமராஜர் நினைவிடத்தை ஏன் பராமரிப்பதில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது கருணாநிதியின் நினைவிடத்தை பராமரிப்பவர்கள் காமராஜர் நினைவிடத்தை மறந்துவிட்டார்களா என்றும் காங்கிரஸ் கட்சிக்குள் வினா எழுந்தது.
இந்த நிலையில் செல்வப்பெருந்தகை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதன் பின்னணியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உள்பட பலரது பதவிகளை காலி செய்து புதியவர்களை நியமிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படி திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சென்று சந்தித்தபோது அங்கு பேசிய செல்வப்பெருந்தகை, எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்ச்யிடம் எங்களுக்கு தொகுதி கொடுங்கள் என கையேந்தி நிற்பது?
ஒருகாலத்தில் நாம் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்தோம், அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்.
செல்வப்பெருந்தகை பேச்சு காங்கிரஸில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வராவிட்டாலும் திமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால், காங்கிரஸின் நிலை என்ன என்று திமுகவில் இருந்து விமர்சனம் கிளம்பியது.

இந்த சூழலில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய ஈரோடு எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.
யார் நல்லாட்சி செய்தாலும் அது காமராஜர் ஆட்சிதான். ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அதற்கு காமராஜர் ஆட்சி என்று பெயர் வைக்கலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும் என்றார்.
செல்வப்பெருந்தகை காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார்; இளங்கோவனோ ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சிதான் என்கிறார்.
இந்த இருவருக்கிடையேயான சர்ச்சைப் பேச்சுக்கள் காங்கிரஸுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், செல்வப்பெருந்தகை மீண்டும் அதிரடியாக காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கோவையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசியவர், பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறிய கட்சிகளான நாம் தமிழர், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை.
எங்களுடைய கட்டமைப்பு வலிமை பெற்றால் தோழமைக் கட்சிகளின் கட்டமைப்பும் வலிமை பெறும்.
இது எங்களது ஜீவாதார உரிமை என்பதால் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

திமுகவுடன் உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். திமுகவை விமர்சிக்கும் கட்சிகளை முதலில் எதிர்ப்பது காங்கிரஸ் தான். தோழமை என்பது வேறு எங்களது கட்டமைப்பை வலிமைப்படுத்துவது என்பது வேறு இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறினார்.
செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சு, தற்போது மீண்டும் திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் டெல்லி வழியாக செல்வப்பெருந்தகைக்கு இதற்கான பதில் ரியாக்ஷன் வரும் என்கிறார்கள் திமுகவட்டாரத்தில்.