மதுபோதையில் மெட்ரோ ரயில் அதிகாரியை கன்னத்தில் தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள் பாடிவந்த வேல்முருகன், சுப்பிரமணிய புரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க என்னும் பாடல் மூலம், பிரபலமானவராவர். இதற்குப் பின்னர் பல்வேறு சினிமாக்களில் பாடி வந்தவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் பாடல்கச்சேரிகளை நடத்துவது, கச்சேரிகளில் பங்கேற்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்படியான நிலையில், வேல்முருகன் மதுபோதையில் பொதுவெளியில் சர்ச்சைகளில் ஈடுபடுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியது. கடந்த மார்ச் மாதம் மதுபோதையில் சென்னை விமான நிலையத்தில் வேல்முருகன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தது பரபரப்பானது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு தகராறில் ஈடுபட்டதாக பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். அதுவும் மதுபோதையில் அதிகாரியைத் தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் உதவி மேலாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது உதவி மேலாளரை வேல்முருகன் கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை இரவில் கைதும் செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது வேல்முருகன் மதுபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், பொதுவெளியில் தாக்குதல் நடத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் வேல்முருகனை கைது செய்தனர். இந்த நிலையில் இன்று (மே 13) பாடகர் வேல்முருகனை காவல்நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.